செய்திகள்

புதிய தொழிலாளர் சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முன்மொழிவுகள்

2026 நவம்பர் 17 • செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் மன்றத்தினால், முன்மொழியப்பட்டுள்ள தொழிலாளர் சட்ட மறுசீரமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவான சட்டப் பாதுகாப்புகளை உள்ளடக்குவதற்கான பல்வேறு முன்மொழிவுகள் தொழிலாளர் சட்ட உருவாக்கத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டன. இம்முன்மொழிவுகள் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பாதுகாத்தல், சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தல், பணியிடங்களில் ஏற்படும் தடைகள் மற்றும் பாகுபாடுகளைத் தடுப்பதுடன், உள்ளடக்கிய வேலைவாய்ப்பு நடைமுறைகளை ஊக்குவிக்கும் குறிப்பிட்ட சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் மன்றத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த நவம்பர் 11 ஆம் திகதி நாரஹேன்பிட்டியிலுள்ள மெஹெவர பியச கட்டிடத்தில் அமைந்துள்ள தொழிலாளர் அமைச்சில் இக்கருத்துகளையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை உடன்படிக்கையின் (UNCRPD) 27 ஆவது உறுப்புரையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள வேலை மற்றும் வேலைவாய்ப்பிற்கான உரிமையை இலங்கையின் தொழிலாளர் சட்ட அமைப்பிற்குள் பயனுள்ளதாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மாற்றுத்திறன் அடிப்படையில் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதைத் தடுப்பது, ஆட்சேர்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதைத் தவிர்ப்பது, பதவி உயர்வு மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகள் மறுக்கப்படுவதைத் தடுப்பது, அத்துடன் நியாயமற்ற வகையில் சேவையிலிருந்து நீக்கப்படுவதைத் தவிர்ப்பது ஆகியவற்றுக்கான தெளிவான சட்டப் பாதுகாப்புகள் அவசியம் என்பதை இம்முன்மொழிவுகள் வலியுறுத்தின.

மாற்றுத்திறனாளி ஊழியர்கள் தங்களது கடமைகளை திறம்படச் செய்யக் கூடிய வகையில் “நியாயமான வசதிகளை” (Reasonable Accommodation) வழங்குவது முதலாளிகளின் பொறுப்பாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதையும் முன்மொழிவுகள் சுட்டிக்காட்டின. அதனடிப்படையில் பணியிடங்களின் அணுகல்தன்மையை மேம்படுத்துதல், தேவையான உதவித் தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குதல், வேலை நேரங்கள் மற்றும் பணிமுறைகளை தனிநபர் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்தல், தகவல் மற்றும் தொடர்பாடல் வசதிகள் அனைவரும் அணுகக்கூடிய வகையில் அமைத்தல் ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அரச துறையில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மூன்று சதவீத வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமும், தனியார் துறையில் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டிய தேவையும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு பங்கேற்பை அதிகரிக்க ஏற்ற சட்ட மற்றும் கொள்கை நடவடிக்கைகள் குறித்தும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்கல்வி, திறன் மேம்பாடு, வேலைப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பொருத்த சேவைகளில் சமமான அணுகலை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. பணியிடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பதுடன், அவர்கள் எதிர்நோக்கும் அநீதிகள் தொடர்பாகப் புகார் அளித்து நிவாரணம் பெறக்கூடிய எளிதில் அணுகக்கூடிய முறைமைகளை அறிமுகப்படுத்துவதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தரநிலைகள், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை உடன்படிக்கை மற்றும் இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு புதிய தொழிலாளர் சட்டங்கள் உருவாக்கப்படும் போது மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் உரிய முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் எனவும் இம்முன்மொழிவுகள் வலியுறுத்தின.

மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் கருத்துகளைப் பெற்றுக்கொள்வது, புதிய சட்டங்களின் அமலாக்கத்தைக் கண்காணிப்பது மற்றும் அவற்றின் நன்மைகள் உண்மையில் தொடர்புடைய மக்களிடம் சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கான பொருத்தமான வழிமுறைகளை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் நதீகா வடலியத்த மற்றும் தொழிலாளர் சட்ட உருவாக்கத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற குழுவின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


புகைப்பட கேலரி

சமீபகால பதிவுகள்

அணுகல்தன்மை பார்வையைத் தனிப்பயனாக்குங்கள்
உரை அளவு
வண்ண முறை
உரையை ஒலியாக்குதல்