செய்திகள்

தொழிலாளர்களின் உரிமைகளை பலவீனப்படுத்துவது அல்ல, அவற்றை மேலும் வலுப்படுத்தும் முற்போக்கான தொழிலாளர் சட்ட அமைப்பை உருவாக்குவதே முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்ட மறுசீரமைப்புகளின் பிரதான நோக்கம் - தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

2026 அக்டோபர் 29 • செய்திகள்

தொழிலாளர்களின் உரிமைகளை பலவீனப்படுத்துவது அல்ல, அவற்றை மேலும் வலுப்படுத்துவதோடு, தற்போதைய வேலை உலகத்திற்கும் சர்வதேச தொழிலாளர் தரநிலைகளிற்கும் ஏற்ப பொருந்தக்கூடிய முற்போக்கான தொழிலாளர் சட்ட அமைப்பை நாட்டில் உருவாக்குவதே முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்ட மறுசீரமைப்புகளின் பிரதான நோக்கமாகும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

தொழிலாளர் சட்டத் திருத்த செயல்முறையுடன் தொடர்புடைய மாகாண மட்ட பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகள், அதேபோன்று தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நேற்று (28) காலை நாரஹேன்பிட்ட, மெஹெவர பியசவில் அமைந்துள்ள தொழிலாளர் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேல் மாகாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சரவை அங்கீகாரத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த சட்ட மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வெளிப்படைத்தன்மையுடனும் அனைத்து தரப்பினரின் பங்கேற்புடனும் மேற்கொள்ளப்படுவதாக வலியுறுத்திய பிரதி அமைச்சர், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள 17 உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீனக் குழு இதுவரை சுமார் 40 தடவைகள் கூடிக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அக்குழுவின் சுயாதீனத்தன்மைக்கு எந்தவிதமான தலையீடும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், இந்த செயல்முறையில் மறைமுக நிகழ்ச்சிநிரல் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வழங்குநர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஒரே சட்ட வரைவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபை (NLAC) 11 தடவைகளுக்கு மேல் கூட்டப்பட்டுள்ளது என்றும், முன்மொழியப்பட்ட சட்ட வரைவின் தயாரிக்கப்பட்ட பகுதிகள் ஆகஸ்ட் 7 ஆம் திகதி தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

“எமது நோக்கம் தொழிலாளர்களின் உரிமைகளை பலவீனப்படுத்துவது அல்ல, அவற்றை மேலும் வலுப்படுத்துவதாகும். தற்போதுள்ள சட்டங்களைவிட பல முற்போக்கான அம்சங்கள் இந்த வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மேலும் திருத்தப்பட வேண்டிய விடயங்கள் இருந்தால் அவற்றைப் பற்றி கலந்துரையாடுவதற்கு நாம் தயாராக உள்ளோம். தொழிலாளர்கள் மற்றும் தொழில் வழங்குநர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை கருத்திற் கொண்டு நாட்டிற்கு மிகவும் பொருத்தமான தொழிலாளர் சட்ட அமைப்பை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்,” என அவர் தெரிவித்தார்.

இந்த சட்ட மறுசீரமைப்புகள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தேவைக்கமைய அவசரமாக முன்னெடுக்கப்படுகின்றன என்ற சில தரப்பினரின் கருத்துக்களை நிராகரித்த பிரதி அமைச்சர், அவ்வாறான எந்த நிபந்தனையின் அடிப்படையிலும் இந்த செயல்முறையை விரைவுபடுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை எனவும் தெரிவித்தார். முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பாக மேலதிக கருத்துக்கள் மற்றும் யோசனைகள் இருப்பின் அவற்றை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு தொழிற்சங்கங்களிடம் கோரிய அவர், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் தொழிலாளர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தொழிலாளர் அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ தெரிவித்ததாவது, முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நான்கு முக்கிய துறைகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அவை தொழிலாளர் தரநிலைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு, தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, கைத்தொழில் தகராறு தீர்வு மற்றும் தொழில் உறவுகள், அத்துடன் தொழிற்சங்க உரிமைகள் பாதுகாப்பு மற்றும் தொழிற்சங்க செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துதல் ஆகியவையாகும்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் பொதுவான தொழிலாளர் தரநிலைகளை அறிமுகப்படுத்துதல், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச் சூழலை உறுதி செய்தல், கைத்தொழில் தகராறுகளை விரைவாகத் தீர்த்தல், மேலும் தொழிலாளர் சட்ட மீறல்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நேரடியாக தலையிடுவதற்கான அரசின் சட்ட மற்றும் நிறுவன திறன்களை வலுப்படுத்துதல் ஆகியவை இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பு செயல்முறையின் தொழிலாளர் தரநிலைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான பகுதி குறித்து மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி, பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்போது சம வாய்ப்புகளை உறுதி செய்தல், பணியாளர்களின் அசல் கல்வி மற்றும் தனிப்பட்ட சான்றிதழ்களை தொழில் வழங்குநர்கள் தமது வசம் வைத்திருப்பதைத் தடுத்தல், பணியாளர்களுக்கு அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் எழுத்துமூல சேவை ஒப்பந்தங்களை வழங்குதல் மற்றும் நிரந்தர, தற்காலிக, பருவகால மற்றும் பகுதிநேர வேலை ஒப்பந்தங்களை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல ஏற்பாடுகள் சட்ட வரைவில் முன்மொழியப்பட்டுள்ளன.

பகுதிநேர பணியாளர்களுக்கும் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகளை உறுதி செய்தல், வாராந்தம் ஒன்றரை நாள் ஓய்வு உரிமையை ஒழுங்குபடுத்தல், ஆண்டிற்கு 14 நாட்கள் விடுமுறை வழங்குதல், அத்துடன் ஊதியத்துடனான நோய்வாய்ப்பட்ட மற்றும் தனிப்பட்ட விடுப்பு உரிமைகளை நிர்ணயித்தல் ஆகியவையும் முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளில் அடங்குகின்றன.

மேலும், தாய்மை பாதுகாப்பு மற்றும் பெற்றோர் உரிமைகளை உறுதி செய்வதற்காக உயிருடன் குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் 84 வேலை நாட்கள் ஊதியத்துடனான மகப்பேறு விடுப்பு, தந்தைகளுக்கு ஐந்து நாட்கள் ஊதியத்துடனான தந்தைமை விடுப்பு மற்றும் தத்தெடுப்பின் போது விடுப்பு வழங்குதல் தொடர்பான முன்மொழிவுகளும் இடம் பெற்றுள்ளன. கர்ப்பம் அல்லது பிரசவம் காரணமாக பணிநீக்கம் செய்யப்படுவதைத் தடுத்தல் மற்றும் மகப்பேறு விடுப்பின் பின்னர் மீண்டும் பணிக்குத் திரும்பும்போது வேலைப் பாதுகாப்பை உறுதி செய்தல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்புகளின் மற்றொரு முக்கிய அம்சமாக, தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் C190 உடன்படிக்கையின் தரநிலைகளுக்கு ஏற்ப சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல் அமைந்துள்ளது. அதன்படி, உடல், உளவியல், பாலியல் மற்றும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுத்தல், மேலும் பணியிடங்களுடன் மட்டுமல்லாமல் பணிக்கான பயணங்கள், தொழில் வழங்குநர் வழங்கும் போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகள், மின்னஞ்சல் மற்றும் டிஜிட்டல் தொடர்பாடல் வழியாக இடம்பெறும் துன்புறுத்தல்களையும் சட்டப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வருவதற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

15 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தலைத் தடுப்பதற்காக எழுத்துமூலக் கொள்கையொன்றையும் உள்நாட்டு முறைப்பாட்டு விசாரணை அமைப்பையும் நிறுவுதல், முறைப்பாடுகளை விரைவாக விசாரித்தல், பாதிக்கப்பட்டவர்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் முறைப்பாடுகளைச் சமர்ப்பித்ததற்காக பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தடுத்தல் ஆகியவற்றிற்கும் விதிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

உள்நாட்டு நடைமுறைகள் மூலம் நியாயமான தீர்வு கிடைக்காத சந்தர்ப்பங்களில், தொழிலாளர் தீர்ப்பாயங்களின் மூலம் நிவாரணம் பெறுதல், மீளப் பணியில் அமர்த்தல், பாதுகாப்புக் கட்டளைகள் பிறப்பித்தல் மற்றும் நிதி இழப்பீடு வழங்குதல் போன்ற பரிகாரங்களும் முன்மொழியப்பட்ட சட்டச் சட்டகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்மொழியப்பட்ட சட்ட வரைவுகளில் இடம்பெற்றுள்ள விடயங்களாகும். தொழிற்சங்கங்கள், தொழில் வழங்குநர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளின் அடிப்படையில் அவை மேலும் திருத்தப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிற்சங்க பிரதிநிதிகள், முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பாக தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன்வைத்ததுடன், அவை தொடர்பாக விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

முன்மொழியப்பட்ட சட்ட வரைவை தற்போது எவரும் www.labourmin.gov.lk என்ற தொழிலாளர் அமைச்சின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இந்த நிகழ்வில் 116 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், தொழிலாளர் ஆணையாளர் நாயகம் நதீகா வடலியத்த உள்ளிட்ட தொழிலாளர் அமைச்சு மற்றும் தொழிலாளர் திணைக்களத்தின் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


புகைப்பட கேலரி

சமீபகால பதிவுகள்

அணுகல்தன்மை பார்வையைத் தனிப்பயனாக்குங்கள்
உரை அளவு
வண்ண முறை
உரையை ஒலியாக்குதல்