செய்திகள்

நவீன தொழில்நுட்பம் மற்றும் பல மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் தொழில் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகம்

2026 செப்டம்பர் 14 • செய்திகள்

மக்களுக்கு தமது சேவைகளை மிகவும் திறமையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கொண்டு சேர்க்கும் நோக்கில், நவீன தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பல சேவைகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட தொழில் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று (11) பிற்பகல் நாரஹேன்பிட்டியில் உள்ள "மெஹெவர பியச" கட்டிடத்தில் அமைந்துள்ள தொழில் அமைச்சில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

 

தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த புதிய இணையத்தளத்தின் ஊடாக மக்களுக்குப் பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

திருத்தப்பட்ட தொழில் சட்டங்கள் மற்றும் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு வேலைத்திட்டங்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய துல்லியமான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வசதியும், ஊழியர் சேமலாப நிதியம் (EPF) உள்ளிட்ட தொழில் துறை சார்ந்த பல்வேறு விண்ணப்பப் படிவங்கள், சம்பள நிர்ணயச் சபை தீர்மானங்கள், வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் சுற்றறிக்கைகள் போன்றவறறைப் பதிவிறக்கம் (Download) செய்யும் வசதியும் இந்த புதிய இணையத்தளத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

 

கைத்தொலைபேசிகள் மற்றும் கணினிகள் மூலம் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பயனர்கள் தமக்கு விருப்பமான மொழியில் அணுகக்கூடிய இந்த இணையத்தளத்தின் ஊடாக, தமது தொழிலாளர் உரிமைகள் மற்றும் பணிபுரியும் இடத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இணையவழியில் (Online) அமைச்சிடம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

www.labourmin.gov.lk என்ற முகவரியின் ஊடாக இந்த Web இணையத்தளத்தை அணுக முடியும் என்பதுடன், இதன் மூலம் அமைச்சின் கீழ் இயங்கும் தொழில் திணைக்களம், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம், தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் மற்றும் தேசிய தொழில் கற்கைகள் நிறுவகம் ஆகியவற்றின் Web இணையத்தளங்களை அணுகும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசாங்க சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஒரு படியாக நடைமுறைப்படுத்தப்பட்ட  இத்திட்டத்தின் மூலம், பொதுமக்கள் அமைச்சுக்கு நேரடியாக வராமலேயே தமக்குத் தேவையான பல சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

 

இவ்விணையத்தள வெளியீட்டு நிகழ்வுக்கு இணைவாக, ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காக உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் முன்னேற்றத்தை (Check claim status) இணையவழியில் பரிசீலிப்பதற்கான வசதியும் "Digital EPF" சேவையின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளும் இவ்விணையத்தள வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 


புகைப்பட கேலரி

சமீபகால பதிவுகள்

அணுகல்தன்மை பார்வையைத் தனிப்பயனாக்குங்கள்
உரை அளவு
வண்ண முறை
உரையை ஒலியாக்குதல்